இனிய பெருநாள் வாழ்த்துகள்

1 பின்னூட்டங்கள்

பதிவர் சகோதரர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகள்..

நல்லறங்கள் நாடச் செய்து
தீமைகளிலிருந்து தடுத்து
மனித நேயம் தழைக்க செய்து
மனதில் மதவெறி அழித்து
மண்ணில் அமைதியுடன்
மக்கள் அனைவரும் வாழ

வல்ல இறைவனை

இறைஞ்சுகிறேன்..

மதவெறி கற்பித்தவன் முட்டாள்
மதவெறி பரப்புகிறவன் அயோக்கியன்
மதவெறி போற்றுகிறவன் காட்டுமிராண்டி

மதவெறி ஒழிப்போம்..
மனித நேயம் காப்போம்


முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்

32 பின்னூட்டங்கள்முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்

வினை தீர்ப்பான் என்று இந்து நண்பர்களால் நம்பப் படுகின்ற வினாயகரின் பெயரால் - கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

எளிமைக்குப் பெயர் பெற்ற கடவுளாகச் சொல்லப் படும் இவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்டவ்ர்களின் தரிசனத்துக்கு எட்டாத 'வந்தேறி'தெய்வங்களை போன்றவர் அல்ல. 'சாமான்யனின் தெய்வமாக' ஆலமர, வேப்பமர நிழலிலும் மற்றும் ஆத்தங்கரைகளிலும் வீற்றிருக்கும் 'புள்ளையாரை' முன்வைத்து முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாட்டுச் சாணம் அல்லது களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ வீசி எறிவர். வினாயகர் சதுர்த்தி என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் கொழுக்கட்டை கிடைக்கும் என்பதுதான்.

இன்றோ, தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

சுதந்திர போராட்டத்தின் போது, பாலகங்காதர திலகர், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி ஹிந்து-முஸ்லிம்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நாட்டுப் பற்றை கொண்டுவர முயன்ற போது. அதில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு - தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாக' சிக்கிக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பகையை வளர்ப்பதற்கா எந்த வாய்ப்பையும் தவற விடாத ஹிந்துத்வ சக்திகள், கோட்ஸே என்ற சித்பவன பிராமனனால் மஹாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டபோது அதைத் திரித்து, "ஒரு முஸ்லிம்தான் காந்தியை படுகொலை செய்தான்" என்று வதந்தி பரப்பினார்கள். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து தென்காசியில், தங்களது சொந்த இந்து முன்னணி அலுவலகத்தில் 'வெடிகுண்டு' வைத்துவிட்டுப் பழியை அப்பாவி முஸ்லிம்கள் தலையில் போட்டுக் கலவரம் செய்ய முயன்று - இறுதியில் போலீசில் 'வகையாக சிக்கி' மூக்கை உடைத்துக் கொண்டது.

வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்வைத்து இந்த ஆண்டு சங்பரிவார் தனது கலவரத் திட்டத்தை - முத்துப்பேட்டை, திருவிதாங்கோட்டை, தக்கலை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

'இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலை' போகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டு, வழக்கமாகச் செல்லும் வழியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வசிப்பிடம் வழியாகத்தான் புள்ளையாரைத் தூக்கிச் செல்லவேண்டும் என்று மக்களைத் தூண்டி வருகிறார்கள். அந்தப் பொய்களை கேட்கிற எவருக்கும் இஸ்லாமியர்கள் வினாயகரை எதிர்க்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.

முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது, "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாது. நாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது. கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாது. ஆனால் 'பக்த கோடிகளாக' வேஷமிட்டு, 'சோம பானம்' 'சுரா பானம்' அருந்தி, சுய நினைவில்லாமல் கூலிக்கு மாரடிக்கிற 'கேடிகள்' போடுகிற இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்கள்தாம் முஸ்லிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக 'வினாயகர் ஊர்வலம்' செல்வதை எதிர்க்கத் தூண்டுகிறது.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல. 'வினாயகர் ஊர்வலம்' என்ற போர்வையில் கலவரம் விளைவித்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்

வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பான மிரட்டல்தான்.

ஹிந்து தர்மப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்' என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.

வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.

சாதி வேறுபாடு பாராட்டும் இந்துத்வாவின் இரட்டை வேடம் மக்கள் அறியாதது அன்று. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது பின்னங்கால் பிடரியில் இடிபட, மூச்சு முட்ட 'ஹை கோர்ட்' 'சுப்ரீம் கோர்ட்' என்று அலைந்து -திரிந்து தடை வாங்கியது - ஹிந்துத்வ கும்பல்தான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்து ஆதிக்கவாத சக்திகள் அத்துமீறும் போதெல்லாம் வாயையும் 'மற்றதையும்' பொத்திக்கொண்டு - காஷ்மீர் உயர் சாதி பண்டிட்களுக்காக 'குய்யோ' முறையோ' என்று ஒப்பாரி வைப்பதும் ஹிந்துத்வ கும்பல்தான்.

ஒவ்வொரு வருடமும் வினாயகர் ஊர்வலத்தின் போது பதட்டம்-கலவரம் ஏற்பட இத்தகைய கோஷங்கள்தான் காரணம் என்று - 'ஸ்காட்லாந்து' போலிசுக்கு இணையாகக் கருதப்படும் தமிழகக் காவல் துறைக்குத் தெரியாதா?

வினாயகர் சிலை கரைக்கப்படுவதால் நீர் நிலைகளில் தேக்கங்களில், ஆறு குளங்களில் ஏற்படும் மாசுகளைப் பற்றி கவலைப்படும் மத்திய-மாநில அரசுகள் - ஊர்வலம் மூலம் ஏற்படும் மதக்கலவரம் பற்றி கவலைப்படாது ஏன்?

நீர் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக - கரைக்கப்படும் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பற்றிய விதிமுறைகளில் காட்டப்படும் அக்கறையில் சிறிதுகூட ஊர்வலத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் நலனில் காட்டப்படாதது ஏன்?

சட்டமும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இழவுத் துறையாகிப் போன உளவுத்துறை போல் செயலிழந்து விட்டதா? அமைதியாக நடக்க வெண்டிய ஊர்வலத்தை - பதட்டம் நிறைந்ததாக மாற்றும் கயவர்கள் யார் என்று காவல் துறைக்குத் தெரியாதா? டிசம்பர் ஆறை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் சிறிது கூட 'ஹிந்துத்வ' வினாயகர் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது காட்டாதது ஏன்?

பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வுகள் வேண்டி 'பதட்டம்' நிறைந்த ஊர்களில் அனைத்து மதக்கூட்டம் போட்டும் ஹிந்துத்வ வன்முறையாளர்களின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை நெறிபடுத்த சில வரைமுறைகளை அரசும்-காவல் துறையும் எதிர்காலத்தில் செய்யவேண்டும்:

  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் போன்றவற்றைப் பதுக்கி வைத்திருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • முஸ்லிம்களின் வசிப்பிடங்கள வழியாக செல்லும் ஊர்வலங்களை 'வீடியோ' மூலம் படம்பிடிக்க வேண்டும்.
  • வெளியூர்காரர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது.
  • ஊர்வலத்தின் போது முழங்குவதற்கான கோஷங்களைக் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத கோஷங்களை எழுப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவற்றைச் செய்யத் தவறினால் ஊர்வலத்தின்போது ஏற்படும் வன்முறை, பொருள் நஷடம், உயிர் இழப்பு ஆகியவற்றிக்குக் காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும். கடமையைச் செய்ய காவல் துறை தவறினால், மத நல்லிணகத்திற்குக் கேடு விளைவிக்க விரும்பும் சக்திகளைக் கட்டுப்படுத்த மேற்கண்ட நெறிமுறைகளை வலியுறுத்தி, சமூக அக்கறையுள்ள அமைப்புகள் பொதுநல வழக்கு தொடர்ந்து அரசின் கவனத்தை திருப்ப வேண்டும்.

நீதி மறுக்கப்பட்ட தமிழக முஸ்லிம்கள்

15 பின்னூட்டங்கள்
நீதி மறுக்கப்பட்ட தமிழக முஸ்லிம்கள்

தமிழகச் சிறைகளில் வாடுகிற தண்டனைக் கைதிகளில் எட்டாண்டுகாலம் சிறையில், முழுமையாய் தண்டனை கழித்தவர்களைப் 'பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு தொடக்கவிழா'வை ஒட்டி (செப். 15,2008) விடுதலை செய்ய இருப்பதையறிந்து மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் கோவையை சார்ந்த முஸ்லிம் தாய்மார்கள்.

கடந்த 10 ஆண்டு காலமாக, தலைவனை இழந்து தவித்த குடும்பம், மகனை இழந்த பெற்றோர், தந்தையின் முகம் மறந்த குழந்தைகள், என அனைத்து விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளான இஸ்லாமியக் குடும்பங்கள் அல்லவா? அதனால் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனிப்பான செய்தியாக நம்பிக்கை கொள்ள வைத்தது.

1998இல் கருனாநிதி ஆட்சியின்போது கோயம்புத்தூரில், காவித்துறையின் எடுபிடியாக செயல்பட்ட காவல்துறை, அதன் கட்டுக்கடங்கா அத்துமீறல் மூலம் முஸ்லிம்களின் மனித உரிமைகளை நசுக்கியது. மதவெறி அமைப்புகளின் துணையோடு கோவை முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதரமே அழிக்கப்பட்டது. மனிதர்கள் உயிரோடு தீ வைத்துக் கொளுழுத்தப்பட்டனர். பல சகோதரிகள் மாணப் பங்கப்படுத்தப்பட்டனர். அவர்களின் வனிக நிறுவனங்களும் குடியிருப்புகளும் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்கள் எல்லை மீறி நடந்தபோது அரசின் சட்டம் கைக்கட்டி- கைக் கொட்டி நின்றது; காவல்துறை காவிகளோடு கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.

பாதிக்கப்ப்ட்டவர்கள் நியாயம் கேட்ட போது - காதுகளை பொத்திக்கொண்டது அரசு நிர்வாகம். வன்முறையாட்டம் ஆடிய, சட்டத்தின் மூலம் தண்டனை பெற வேண்டிய கொலைகாரக் காவிகள் வெகு சுதந்திரமாக வெற்றிக் களிப்போடு நடமாடினர். ஒரே நம்பிக்கையான நீதித்துறையாலும் புறக்கணிக்கப்படுகிறோமே என்று உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் சிலர் நீதி கேட்டு 'வெடித்த' குண்டுகள் - 'பயங்கரவாத'மாக திரிக்கப்பட்டது.. பட்டாசு வெடித்தால்கூட முஸ்லிம்கள் மீது பொய்வழக்குப் போடக் காத்திருக்கும் காவல் துறை - வெடி குண்டு என்றால் விடுமா?. குற்றவாளிகளைத் தேடுகிறோம் என்று நள்ளிரவு நேரங்களில் கோவை முஸ்லிம்களின் வீட்டுக்கதவுகளை உடைத்துக்கொண்டு தேடியது, படுக்கை அறையிலிருந்து கக்கூஸ் வரை மூக்கை நுழைத்துப் பார்த்தது. இஸ்லாமிய வழிபாட்டிடங்கள், கல்விக்கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு தேடி முஸ்லிம்களை 'ஒசாமா பின் லேடனாக ' முத்திரை குத்தியது.

தீவிரவாதிகளைத் தேடுவதாக 'கோஷா' அணிந்த பெண்களையும் முதியவர்களையும் மிரட்டியது, முஸ்லிம்கள் வீட்டில் காய்-கறி நறுக்க வைத்திருக்கும் கத்திகள், ஷேவிங் செய்ய வைத்திருக்கும் பிளேடுகள் போன்றவைகளைக்கூட கைப்பற்றிப் 'பேரழிவு ஆயுதங்களாகப் ' பட்டியலிட்டு சமூகங்களிடையே பதட்டத்தை விளைவித்தது.

கோவையில் முஸ்லிம்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்த நடுநிலைவாதிகளின் குரல்கள் சங்பரிவாரால் நசுக்கப்பட்டன. நியாயம் கேட்ட இந்துச் சகோதரர்களைப் 'போலி சமயசார்பின்மைவாதிகள்' என்றும் 'இந்து மத விரோதி' என்றும் முத்திரை குத்தினர். அதனால் அப்பொழுது முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்ப முஸ்லிம்கள பயந்தது போல - இந்து நடுநிலைமைவாதிகளும் பயந்தனர்.

விசாரனை என்ற பெயரில் வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தவர்களை, கடைக்கு சாமான் வாங்கச் சென்றவர்களை, தெருவோரம் தூங்கிக்கொண்டிருந்த்வர்களை - பதின்ம வயதினர் - இளையர்-முதியர் என்ற பேதம் பார்க்காது அழைத்து சென்றது காவல்துறை.

பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குற்றஞ்சாட்டப்பட்டட் பதின்மவயதினர் - இளைஞர்களாகி, இளைஞர்கள் முதியோராகி, முதியோர் 'மவுத்தா'க்கள் ஆகி விட்டார்கள்.

தமிழகச் சிறைகளில், கோவை வெடிகுண்டு வழக்குத் தீர்ப்பை ஒட்டி விடுதலைபெற்றுச் சென்றவர்களை தவிர, சுமார் 170 முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் பத்தாண்டுகளாகியும் பிணையில் விடுதலை செய்யப்பட்டதில்லை. தண்டிக்கப்பட்டவர்களுக்கு "பரோல்", "எஸ்கார்ட்" இல்லாத பரோல் போன்ற சட்டம் அனுமதித்த சலுகைகளும் முஸ்லிம்களுக்கு மட்டும் வஞ்சகமாக மறுக்கப்பட்டன. இவற்றை நினைத்து இன்றும் முஸ்லிம்களின் நெஞ்சில் கசிகின்ற இரத்தம் நிற்கவில்லை.

தாமதமாக வழங்கப்படும் நீதியை, மறுக்கப்பட்ட நீதியோடு ஒப்பிடுவார்கள்.(Justice Delayed is Justice Denied) அதனால் சிறுபான்மையினரின் காவலராகக் கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து காலந்தாழ்ந்தாலும் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நிர்க்கதியாய் நின்ற குடும்பங்களின் நம்பிக்கையைத் தூள் தூளாக்கி விட்டது தமிழக அரசு.

ஆயுள் தண்டனை பெற்ற முஸ்லிம் கைதிகள் மட்டும் எத்தனை ஆண்டுகாலம் சிறையில் கழிக்க வேண்டும் என்று சரியான விளக்கம் ஏதுமில்லை. முஸ்லிம் கைதிகள் மட்டும் 'ஆயுள் முழுவதும்' சிறையில் வாடவேண்டும்; அவர்களின் குடும்பத்தினர் எல்லோரும் காலம் முழுவதும் கவலையோடு வாட வேண்டும் என்று உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது அரசின் முடிவு. அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 296 ஆயுள்தணடனைக் கைதிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.

ஏன் இந்த பாகுபாடு?

கலைஞர் ஆட்சியில் சிறைச்சாலைகளில் முஸ்லிம்கள் எவரும் வாடவில்லை என்று பொய்த் தோற்றம் காட்டுவதற்கு அரங்கேற்றப்பட்ட நாடகமா இது? அல்லது வருகிற தேர்தலில் தி.மு.க தனிப்பெரும்பான்மையோடு வென்றால் எஞ்சியுள்ள 'முஸ்லிம் சிறைக்கைதிகளை' விடுதலை செய்வோம் என்று பிரச்சாரம் செய்வதற்காகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பலி ஆடுகளா முஸ்லிம் கைதிகள்?

கோவை தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என்று, "அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொடும் மதக் கலவரங்களில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுதான்" என்று அரசே சொன்னது. ஆனால் குண்டு வெடிப்பிற்கு அடிப்படைக் காரணமான மதக்கலவரக் குற்றத்தில் ஈடுபட்ட காவிகளில் காவல்துறைக் கறுப்பாடுகளில் பலர் கைதாகவே இல்லை. கைதான மிகச் சிலக் காவிகளில் ஒருவர்கூட இன்று சிறையில் இல்லை. எல்லோரும் அப்போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி?

கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில்,சுமார் 600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதும் ஒருவர் கூட கோவை தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் இல்லை. இது குறித்து, பொது மன்னிப்பில் விடுதலையாக தகுதிகளை/வரையறைகளைக் கொண்டும் விடுதலை செய்யப் படாத ஜாஹிர் என்கிற கைதி தகவலறியும் சட்டத்தின் மூலம் காரணம் வினவியபோது, "அவர் புரிந்த குற்றத்தின் தன்மை கருதி 15-09-2007 அன்று வழங்கப்பட்ட பொது மன்னிப்பின்போது விடுதலை செய்யப்பட வில்லை" எனக் கூடுதல் சிறைத் துறை இயக்குனர் பதிலளித்தார். (மு.மு.எண்.51493/பி.எஸ்.1/2007-3 தேதி 26-12-2007). கலைஞர் அரசு செய்த அநீதிக்கு இந்த ஆண்டில் பரிகாரம் தேடிக்கொள்ள இருந்த வாய்ப்பையும் அரசு இழந்து, முஸ்லிகளுக்கு 'அல்வா' கொடுத்து அநீதி இழைத்து விட்டது.

தொப்பியோ முக்காடோ போட்டுக்கொண்டு 'நோன்பு கஞ்சி' குடிப்பதையும், யாருடைய பேச்சையும்-எழுத்தையும் வைத்தோ சிறுபான்மையினரின் நண்பராகக் காட்டி வேஷம் போட்டதை முஸ்லிம்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது.

அது மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கான இயக்கம் என்ற பெயரில் 'இயங்காமல்'முடங்கிக் கிடக்கும் மற்றும் சகோதர இயக்கங்களை மட்டும் எதிர்த்து இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்கு எச்சரிக்கை செய்யும் நேரம் வந்து விட்டது.

இட ஒதுக்கீட்டையும், டிசம்பர் ஆறையும் தவிர தமிழக இஸ்லாமியர்களுக்கு வேறு பிரச்சினைகளே இல்லை என்று 'படம்' காட்டுவதை நிறுத்தச் சொல்லி, இஸ்லாமியர்களின் அடிப்படை வாழ்வுரிமை பற்றிய பிரச்சினைகளை முன்னெடுத்து அவற்றை எப்படித் தீர்ப்பது?, அதில் அரசின் பங்கென்ன?, சமுதாயத்தின் பங்கென்ன? என்ற செயல் திட்டத்தை வரையக் கட்டாயப் படுத்தும் காலம் வந்துவிட்டது.

நீண்டகாலமாக விசாரணை முடிக்கப்படாத முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை உடனடியாக முடிக்கவும் விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் உரிமை கோரியும் மறுபரிசீலனைக்குழு நியமிக்கப்படவேண்டிய வழக்குகளில் உடனடியாக அதைச் செய்யவும் வலியுறுத்தி, பல ஆண்டுகளாக - வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் குடும்பங்களை இஸ்லாமிய அமைப்புகள் காப்பாற்ற வேண்டும்.

அதற்கு முன்பாக அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்? எந்த வரையறையைக் கொண்டு கைதிகள் விடுதலையாகும் தகுதி நிர்ணயிக்கப் பட்டது? எட்டு ஆண்டுகள் எனக் கணக் கிட்டால் சுமார் 70 முஸ்லிம் கைதிகள் பொது மன்னிப்பிற்குத் தகுதியாக இருக்கும்போது, ஏன் ஒரு முஸ்லிம்கூட விடுதலை செய்யப்படவில்லை? என்ற நியாயமான வினாக்களை எழுப்ப வேண்டிய உரிமை சமுதாய அமைப்புகளுக்கும் - விடையளிக்க வேண்டிய கடமை ஆளும் அதிகார வர்க்கத்துக்கும் உள்ளது.

வினாக்கள் எழும்புமா? விடைகள் வெளிவருமா?

மதவெறி அழிப்போம்..

0 பின்னூட்டங்கள்பழிக்கு பழி வாங்குவதாக சொல்லி டெல்லியில் கடந்த சனியன்று (13 செப் 2008) 30 அப்பாவிகளை மதச்சாயம் பூசிய சில மிருகங்கள் வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தது - அடிப்படை மனித நேயத்திற்கு முரனானது. வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

கொலைகாரர்களும்-கயவர்களும் ஹிந்து-முஸ்லிம் சாயம் பூசிக்கொண்டு கோழைத்தனமாக அப்பாவி பொதுமக்களை கொல்வதை உடனடியாக தடுக்கவேண்டும். அரசு மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனர் பொதுமக்கள்.

சுதந்திரமடைந்ததிலிருந்து மும்பை, மீரட், மாலியானா, கோயம்புத்தூர், குஜராத், ஒரிஸ்ஸா என்று ஒவ்வொரு இடத்திலும் நடந்த படுகொலைகளிலிருந்து கலவரம் உருவாக அடிப்படையான காரணங்கள் என்னவென்று தெரிந்தும் - அதை களைய மறுத்த புறக்கணித்ததுதான் தேசமெங்கும் குண்டுகளாய் வெடித்து பரவுகிறது.

அப்பாவிகளைக் கொல்லும் மனித நேயமற்ற குரூரமான குண்டு வெடிப்புகள்-திட்டமிட்ட கலவரங்கள் இவற்றின் அடிவேரை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட அத்தனை கமிஷன்களும் பொது மக்களின் வரிப்பணத்தில், அமல் செய்யப்படாத வெற்று அறிக்கைகளைத்தான் தயாரித்து போட்டன.

தீவிரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டு ஒரு சாரருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது - தீவிரவாதத்தையே அதிகரிக்க செய்தது.

அரசு மத தீவிரவாதத்தை ஒழிக்கும் என்று இனிமேலும் நாம் நம்பிக் கொண்டிருக்கலாமா?

’எல்லை தாண்டிய தீவிரவாதம்’ என்ற கூப்பாடினாலோ அல்லது ’இஸ்லாமிய பயங்கரவாதம் ’ என்ற குற்றச்சாட்டினாலோ அழியாது மதவெறி..

‘பதிலடி’ என்ற சப்பைக்கட்டுடன் அரங்கேற்றப்படும் மனிதப்படுகொலைகளை கண்டு ’ஐயோ பாவம்’ என்று ’உச்சு’கொட்டிவிட்டால் பறிக்கப்பட்ட மனித உயிர்கள் திரும்ப வராது..

குற்றவாளிகள் இரும்புகரம் கொண்டு தண்டிக்கப்படவேண்டும்- அதற்கேற்ற சட்டம் வேண்டும் என்ற அரசியல் கலந்த அலங்கார முழக்கங்களோ சடங்குக்காக நடத்தப்படும் கண்டனப் பேரணிகளோ எதையும் சாதிக்காது..

அப்படியென்றால், மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளுக்கு-அட்டூழியங்களுக்கு முடிவே இல்லையா?

மத்திய-மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியதை இப்பொழுதிலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தால் - மதவெறி ஒடுக்கப்படலாம், மனித உயிர்கள் காக்கப்படலாம்.

காவ்ல துறையும் நீதித்துறையும் - சாதி-மத சார்பின்றி, அரசியல் வாதிகளின் இடையூறின்றி இனியாவது செயல்படவேண்டும்.

உளவுத்துறை- காவல் துறை இவைகளின் தொழில் நுட்பம் மற்றும் ஆயுத நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். எந்த இடத்திலாவது தவறு நடந்தால் அவர்களைத்தான் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.

காவல் துறை - பொது மக்களுக்கு நன்மை செய்து - நம்பிக்கை தரும் நன்பனாக மாறவேண்டும், பாரபடசமில்லாத அவர்களின் செயற்பாடுகளால் பொதுமக்களை குறிப்பாக ‘குற்றப்பரம்பரையாக’ சுட்டப்பட்ட ச்முதாய மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும்.

தேசம், தேசியம் என்ற போலி வார்த்தைகள், வதந்திகள், மற்றும் வரலாறு திருத்தங்கள், மூலம் மக்களை கூறுபோடும் மதவெறி அமைப்புகள் தயவு தாட்சன்யமின்றி நசுக்கப்படவேண்டும்.

மத்திய-மாநில அரசுகளின் நீதி மற்றும் காவல் துறையினர் தங்களின் கடமைகளை பாரபடசமின்றி செய்தால் தீவிரவாதிகள் அந்தந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாலேயே புறக்கணிகப்பட்டு, மனித நேயத்திற்கு புறம்பான செயல்களை கைவிட்டு இத்தகைய குரூரமான செய்லகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க் வாய்ப்புண்டு.

மத்திய-மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியதை இப்பொழுதிலிருந்து கடைப்பிடித்தேயாக வேண்டும், இல்லையென்றால், தீவிரவாத செயல்களும், உயிரிழப்புகளும், கதைக்கு உதவாத வெற்று ’கமிஷன்களும்’ ‘கண்டன பேரணிகளும்’ முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் - மனித உயிர்களற்ற பாலைவனமாய் இந்தியா மாறும் வரை...

மதவெறி அழிப்போம்..மனிதநேயம் காப்போம்.

தினமலருக்கு புத்தி புகட்டுவோம்

3 பின்னூட்டங்கள்

மதவெறி வளர்த்து - மனித நேயம் சிதைப்பதையே வயிற்றுப் பிழைப்பாக கொண்ட 'தினமலர்' தமிழக இஸ்லாமியர்களின் உணர்ச்சி மிக்க எதிர்ப்பையும்- எழுச்சி மிக்க போராட்டத்தையும் கண்ட பிறகும் தன்னுடைய தவறை உணர்ந்து இதுவரை மனமார மன்னிப்பு கோரவில்லை ஆனால், முஸ்லிம்களின் ஆத்திரத்தை குறைக்க என்ன வழியென்று மட்டும் 'சாணக்யத்தனமாக' யோசித்து, சடங்குக்காக வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறது.

'தினமலர்' மனமார மன்னிப்பு கேட்டு விட்டதாக - திட்டமிட்டு ஒரு வதந்தியை இஸ்லாமிய மின்னஞ்சல் குழுமங்களில், வலைப்பூக்களில் மற்றும் இணையதளங்களில் உலாவ விட்டு - முட்டாளாக்கி, முஸ்லிம்களின் எதிர்ப்பை ‘மழுங்கடிக்க' முயற்சி செய்து வருகிறது। தினமலரின் இந்த நாடகத்தை - உண்மையென் நம்பி, சாத்வீகமான முறையில் முஸ்லிம்கள் தற்போது தெரிவித்து வரும் எதிர்ப்பை நிறுத்திவிடக்கூடாது।

மதவெறி தூண்டும் தினமலரின் - வக்கிரபுத்தியை உலக நாடுகளுக்கு எடுத்தியம்பி, அந் நாடுகளின் சட்டம் அனுமதித்திருக்கும் வழியில் 'தினமலர்' இணையதளத்தை தடைசெய்ய அதன் இறக்குமதியை தடை செய்ய தற்போது முஸ்லிம் சகோதரர்கள் எடுக்கும் முயற்சிகளை நிறுத்திவிடக் கூடாது.

தமிழக முஸ்லிம்களை ‘கிள்ளுக்கீரையாக' நிணைத்துக் கொண்டிருக்கும் - தினமலருக்கு, நாம் உலகெங்கும் பரந்து-படர்ந்து விழுது விட்டு ஓங்கி நிற்கும் ஆலமரம் என்று நிரூபிக்க வேண்டும்।

நமது சகோதரர்கள எடுக்கும் நடவடிக்கைகள் 'தினமலரு'க்கு புத்தி வரும் வரை அல்லது பொருளாதர நஷ்டம் வரும் வரை தொடரவேண்டும்। அதற்காக நாம் கீழ்கண்ட ஐந்து விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். ...


1. நமது நடவடிக்கைகளின் மூலம் 'தினமலருக்கு' உண்மையில் புத்தி வந்ததா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.
2. எதிர்பார்த்த மாற்றம் உண்மையிலேயே ஏற்பட்டால் - அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்றும்
3. மாற்றம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கான
4. வழிமுறைகளை ஒருங்கிணைத்து - அந்த வழிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று ஒரு செயல் திட்டத்தை (Action Plan or Plan of Actions) உருவாக்க வேண்டும்
5। அந்த திட்டத்தை - நிறைவேற்ற ஆர்வமுள்ள சகோதரர்களை உள்ள்டக்கிய சிறு சிறு குழுக்களை அமைத்து பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.


இயக்க விலங்கை உடைத்து - குழு மணப்பான்மையை தகர்த்து அனைவரும் இஸ்லாமியர்களாக ஒன்றிணைந்தால் மதவெறி வளர்க்கும் ‘வந்தேறிகளை' வந்த வழியே திருப்பி அனுப்பிவிடலாம்..இன்ஷா அல்லாஹ்